சில ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பு ஒப்பீட்டளவில் மிகச் சிறிதாக உள்ளதாக சில பெற்றோர்கள் கவலைப்படுவதுண்டு. ஆணுறுப்பு வளர்ச்சியடைய வழிகள் உண்டு.
ஆணுறுப்பு அளவு குறித்த சந்தேகங்கள் இங்கு எல்லா வயது ஆண்களுக்கும் உண்டு. அதுகுறித்து விளக்குகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். 'ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்ற கவலை பலருக்கும் இருக்கும். ஆணுறுப்பு குறித்த சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். ஆணுறுப்பில் இரண்டு வகை அளவுகள் (Size) உள்ளன. ஒன்று க்ரோயர் டைப் (Grower Type), மற்றொன்று ஷோயர் டைப் (Shower Type). ஷோயர் டைப் ஆணுறுப்பு இயல்பான நிலையில் பார்ப்பதற்குப் பெரிதாகத் தெரியும். ஆனால், விறைப்படையும்போது கொஞ்சம்தான் விறைப்படையும். குரோயர் டைப் ஆணுறுப்பு பார்ப்பதற்குச் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால் விறைப்படையும்போது அது முழுமையானதாக இருக்கும். 80% ஆண்களுக்கு இந்த க்ரோயர் டைப் ஆணுறுப்புதான் இருக்கிறது. ஆனால், இவர்களில் பலர் ஆபாசத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு தங்களுக்கு ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறதே என்று கவலைப்படுவார்கள். இவர்களது கவலை அநாவசியமானது. இந்த இயல்பு நிலைகள் தவிர, மருத்துவ ரீதியாக ஒருவரது ஆணுறுப்பு சிறியதாக இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இன்னும் சிலருக்கு ஆணுறுப்பே வளராமல்கூட இருக்கலாம். பொதுவாக ஆண்களுக்கு குரோமோசோம் குறைபாடுகளால் ஆணுறுப்பு வளராமல் போகலாம். ஹார்மோன்கள் குறைபாடுகளால் ஆணுறுப்பு வளர்வதில் சிக்கல் வரலாம். அல்லது விந்துப் பைகள் கீழே இறங்குவதாலும் ஆணுறுப்பு சரியாக வளராமல் போகலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களின் ஆணுறுப்பு சிறிதாக இருப்பதால், அவர்கள் திருநங்கையாக மாறிவிடுவார்களோ என்று சிலர் அதீதமாக யோசிப்பார்கள். குறிப்பாக, ஆண் குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த அச்சம் ஏற்படலாம். அப்படியெல்லாம் மாறுவதில்லை, மாறவும் முடியாது. சில ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பு ஒப்பீட்டளவில் மிகச் சிறிதாக உள்ளதாக சில பெற்றோர்கள் கவலைப்படுவதுண்டு. ஆணுறுப்பு வளர்ச்சியடைய வழிகள் உண்டு. ஆணுறுப்பு சிறிதாக உள்ளதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து முதலில் கண்டறிய வேண்டும். அதற்குக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அப்போது அவர் சில அடிப்படையான பரிசோதனைகளை மேற்கொள்வார். கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ஆணுறுப்பு கொண்ட குழந்தைகளும் உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் குரோமோசோம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். சோதனையின் முடிவில், ஆண் ஹார்மோன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அதை சிகிச்சை மூலம் கொடுக்கவேண்டும். விந்துப் பைகள் வளராமல் இருந்தால், ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH - Folliclestimulating Hormone), லூட்டினைஸிங் ஹார்மோன் (LH - Luteinizing Hormone) முதலிய ஹார்மோன்கள் சுரப்பு குறைவாக இருக்கிறதா என்று பார்த்து சிகிச்சை மூலம் கொடுத்து குழந்தையின் விந்துப் பைகள் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். இவை போன்ற சிகிச்சைகளை சரியான முறையில் கொடுத்தால் அக்குழந்தைகள் முழுமையான ஆண் குழந்தைகளாக வளரலாம். சில நேரங்களில் விந்துப் பைகள் சரியாக வளரவில்லை என்றால்கூட மீசை, தாடி மற்றும் ஆணுறுப்புகள் வளர்ந்திருக்கும். என்ன பிரச்னை என்று பார்த்து, சரியான நேரத்தில் சரியான சிகிச்சை வழங்குவதன் மூலமாக அக்குழந்தைகளின் பாலியல் உறுப்பு சார்ந்த குறைகளை நீக்கலாம். குழந்தைப் பருவத்தில் மட்டும்தான் ஆணுறுப்பு சார்ந்த பிரச்னைகளைச் சரி செய்யமுடியும் என்றில்லை. பெரியவர்களான பிறகும்கூட இவற்றை சரிசெய்ய முடியும். 25 வயது ஆண் ஒருவருக்கு ஆணுறுப்பு மிகமிகச் சிறிதாக இருந்தது. அவரைப் பரிசோதித்தபோது, அவரது ஆண் ஹார்மோன்கள் சுரப்பு மிகமிகக் குறைவாக இருந்தன. எனவே ஹார்மோன் சிகிச்சையைத் தொடர்ச்சியாகக் கொடுத்த பின்பு தாடி, மீசை வளர்ந்தது. அதேபோல ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) கொடுத்து விந்துப் பைகளையும் கொஞ்சம் வளர வைத்தோம். இரண்டு, மூன்று வருடங்கள் சிகிச்சைக்குப் பிறகு, ஆணுறுப்பு நார்மல் அளவுக்கு வளர்ந்தது. அதன் பின்னர் அவருக்குத் திருமணம் நடந்தது. அதற்குப் பின்னால் ஏற்பட்ட பல்வேறு குறைகளும் சரிசெய்யப்பட, குழந்தைப்பேறும் கிடைத்து அந்த நபர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். எனவே ஆணுறுப்பு சார்ந்த பிரச்னைகளை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் எவ்வயதிலும் சரிசெய்ய முடியும் என்பதே உண்மை' என்றார்.
Leave Comments